2 நாளில் 2.50 லட்சம் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் புதுச்சேரி ஸ்தம்பிப்பு
தொடர் விடுமுறை காரணமாக இரண்டு நாளில் இரண்டரை லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்ததால் நகரப் பகுதி சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. கடந்த புதன்கிழமை ஆயுத பூஜை, வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை, மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை என, 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், புதுச்சேரியில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு நாட்களில் இரண்டரை லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் புதுச்சேரிக்கு வந்து சென்றதால் புதுச்சேரி நகரமே இரண்டு நாட்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மூச்சு திணறிப் போய்விட்டது. புதுச்சேரியில் எந்த சாலையில் திரும்பினாலும் வெளி மாநில கார்கள் சிக்கிக் கொண்டு எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவில் அணிவகுத்து காணப்பட்டது. இதனால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் அன்றாட பணிகளுக்கு சாலையில் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டதால் குறுக்கு சாலைகளை பயன்படுத்தி நொந்து போயினர். போதாக்குறைக்கு நகரத்தின் முக்கிய சாலைகளாக விளங்கும் அண்ணா சாலை, காமராஜர் சாலையில் உள்ள தியேட்டர்களில் வெளியிடப்பட்ட புது திரைப்படங்களின் காட்சிகள் முடிந்து ஒரே நேரத்தில் மக்கள் வெளியேறியதால் இந்த சாலைகளில் தாறுமாறன போக்குவரத்து பாதிப்புக்கு முழு காரணமாகி போனது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ள புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள், டாடா ஏஸ்கள் போன்ற வாகனங்களை ஒழுங்கு படுத்தாவிட்டால் புதுச்சேரியில் எந்த சாலையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு போய்விடும் என்பதற்கு கடந்த இரண்டு நாட்களே சாட்சிகளாக உள்ளன. நேற்று இரவு அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போக்குவரத்து எஸ்.பி., ரட்சனா சிங் தலைமையில் நுாறுக்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று வழிகளில் வாகனங்களை செல்வதற்கு போக்குவரத்து போலீசார் திருப்பி விட்டனர். அதனை தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பின்பே போக்குவரத்து நெரிசல் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்பியது.