பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கவர்னருடன் திடீர் சந்திப்பு
புதுச்சேரி : பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்ததால், அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் தர பா.ஜ., மற்றும் பா.ஜ.வுக்கு ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி துாக்கினர்.அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், ரகசிய கூட்டம் நடத்தி, மத்திய அமைச்சர்களை சந்தித்து, அமைச்சர் பதவியை சுழற்றி முறையில் அளிக்க வேண்டும். ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் எனமுறையிட்டும் எந்தவித மாற்றமும் நிகழவில்லை.இந்த நிலையில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் நேற்று காலை ராஜ்நிவாஸ் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கூறுகையில்; இலங்கை அரசு கைது செய்து வைத்துள்ள மீனவரை விடுவிக்க மீனவர்களுடன் கவர்னரை சந்தித்து கோரிக்கை விடுக்க வந்தேன். கட்சி தலைவர், அமைச்சர் யார் என்பது கட்சி முடிவு செய்யும். கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என கூறினார்.ரிச்சர்ட் எம்.எல்.ஏ., கூறுகையில்; எனது தொகுதியில் சில பிரச்னைகள் உள்ளது. அதனை சரிசெய்ய கவர்னரை சந்திக்க வந்தேன் என கூறினார்.