போலி கையெழுத்து வழக்கு; அரசு ஊழியர் உட்பட 3 பேர் கைது
வில்லியனுா : வில்லியனுார் துணை தாசில்தார் போலி கையெழுத்திட்ட வழகில் அரசு ஊழியர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மங்கலம் தொகுதி, ஆனந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். தனது மகள் கல்லுாரி படிப்பிற்காக சென்டாக் மூலம் விண்ணப்பிக்க வருவாய்த்துறையில் சாதி, குடியிருப்பு, உள்ளிட்ட சான்றிதழ் வேண்டி வில்லியனுார் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.சாதி சான்றிதழ் பெற ஏற்கனவே அலுவலத்தில் பெறபட்ட சாதி சான்றிதழ் இருந்தால் நகல் இணைக்குமாறு வி.ஏ.ஒ., தெரிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த ஏப்., மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த சான்றிதழ் நகலை இணைத்து கொடுத்தார்.அந்த நகலில் இருந்த சீல் மற்றும் துணை தாசில்தார் கையெழுத்து மாறுபட்டு இருந்ததால் சந்தேகமடைந்த, அவர் தாசில்தார் சேகரிடம் தெரிவித்தார். தாசில்தார் சேகர் உத்திரவின்பேரில் விண்ணப்ப நகலை ஆய்வு செய்தனர். அதில் சீல் மற்றம் துணை தாசில்தார் கையெழுத்து போலியானது என உறுத்தியானது.இது குறித்து தாசில்தார் சேகர், வில்லியனுார் போலீசில் கடந்த 29ம் தேதி புகார் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையில் ஈடுபட்டு, முதற்கட்டமாக கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த குடிமை பொருள் வழங்கல் துறை ஊழியர் கண்ணியப்பன், 42; சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தனசேகர், 50, அரியூர் தனஞ்செழியன், 48, ஆகியோரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.