அரியூர் அருகே குளவி கொட்டியதில் 100 நாள் பணியாளர்கள் 32 பேர் பாதிப்பு
வில்லியனுார் : அரியூர் அருகே 100 நாள் வேலை செய்த 30க்கும் மேற்பட்ட பணியாளர்களை குளவி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வில்லியனுார் அடுத்த அரியூர் கிராம பஞ்சாயத்து ஆனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலம் சார்பில் கிராமத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஆலமரத் குளத்தில் 100 நாள் வேலையில் நேற்று ஈடுபட்டனர். இந்நிலையில் காலை 10:30 மணியளவில் குளத்தின் கரைப்பகுதி வேலை செய்தபோது புதரில் இருந்த குளவி கூண்டு சேதமாகி அதில் இருந்த குளவிகள் 32க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொட்டியது. குளவி கொட்டி மயக்க நிலையில் இருந்த 30க்கும் மேற்பட்டவர்களை அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனங்கள் மூலம் 20 பேரை அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவைத்து, மயக்க நிலையில் இருந்த 12 பேரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த வள்ளி, ஆனந்தாய், அகிலாண்டம் மற்றும் பொற்கிலை ஆகியோர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்கள் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனந்தபுரம் கிராமத்தில் 100 நாள் பணியாளர்களை குளவி கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.