உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு: முதல்வர் தகவல்

வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு: முதல்வர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.விழாவை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் வாழ்த்தி பேசினார். விழாவில், 29 மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மாநில விருதுகள், மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப் டாப், 13 தம்பதியருக்கு தலா ரூ. 1 லட்சம் திருமண ஊக்கத்தொகை, 250 செவிதிறன் குறைந்த பேருக்கு உபகரணங்கள், விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது; மாற்றுத்திறனாளிகளின் தனி திறமையை வெளிப்படுத்த, தொழில் பயிற்சி அளித்து, அந்த தொழில் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த, அதற்கு ஏற்ற வகையில் இடம் ஒதுக்கி வழங்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு கூட்டங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு, நிவர்த்தி செய்யப்படும். வேலை வாய்ப்பில் 4 சதவீதம் கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களில் 800 யூ.டி.சி, எல்.டி.சி, உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். குடிசைமாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். சமூக நலத்துறையில் மாற்று திறனாளிகளுக்கான கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும். சமூக துறையின் மூலம் தேர்வாகி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மற்ற மாநிலங்களுக்கு செல்லும் மாற்றுதிறனாளிகளின் குழந்தைகளின் அனைத்து செலவுகளை அரசே ஏற்கும். மாற்று திறனாளி வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரமாகவும், மாநில விருதுக்கான ரொக்கப் பரிசு 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பாதிக்கப்படுபவர்களும் மாற்றுத்திறனாளிகளாக சேர்க்கப்படுவர்' என்றார்.சமூக நலத்துறை இயக்குனர் ராகினி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை இயக்குனர் ஆறுமுகம், கள அதிகாரி கருணாநிதி, கண்காணிப்பாளர்கள் திருமுருகன், முரளிசங்கர், ஜாபர், சாதிக் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ