புதுச்சேரி : 'பெஞ்சல்' புயல் காரணமாக புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 4 பேர் உயிரிழந்தனர். வரலாறு காணாத அளவில், ஒரே நாளில் 48.4 செ.மீ., மழை கொட்டியதால் நகரமே வெள்ளக்காடானது. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். 48.4 செ.மீ., மழை
வங்கக் கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கும், மரக்காணத்திற்கும் இடையே கரையை நெருங்கியதை தொடர்ந்து அன்று காலை 10:00 மணிக்கு பெய்ய துவங்கிய மழை, நேரம் செல்ல செல்ல கன மழையாக மாறியது.இரவு முழுதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளும் வெள்ளக்காடானது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரையில், 48.4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.புதுச்சேரியின் 30 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகபட்ச மழையாகும். வெள்ளக்காடானது
புதுச்சேரியில் பிரதான சாலைகளான நுாறடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மறைமலையடிகள் சாலை, கடலுார் சாலை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான சாலை மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நகர்களில் 3 முதல் 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியதுடன் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பயிர்கள் மூழ்கின
பாகூர், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார், வில்லியனுார், கரையாம்புத்துார், திருக்கனுார் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இருளில் மூழ்கியது
புயல் காரணமாக நேற்று முன்தினம் மதியம் 2:௦௦ மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீசிய புயல் மற்றும் கொட்டிய கனமழையில் 300க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும், நகரில் உள்ள 15 துணை மின் நிலையிங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் புதுச்சேரி முழுதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் முடக்கம்
மழைநீர் வீடுகளுக்குள் 3 அடி வரை தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கினர். மழை காரணமாக 4 பேர் இறந்தனர். 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. 15 குடிசை வீடுகள் முழுதும் சேதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முடக்கம்
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாலும் நகர பகுதியில் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. சென்னை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. ராணுவம் வருகை
மழை வெள்ளத்தில் குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக, கலெக்டர் குலோத்துங்கன் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சென்னை கேரிசன் பெட்டாலியன் ராணுவ பிரிவுக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, மேஜர் சங்வான் தலைமையில் 68 பேர் கொண்ட ராணுவ படையினர் நேற்று விடியற்காலை 5:30 மணி முதல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் ஆய்வு
புயல் மற்றும் மழை பாதிப்புகளை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். முதல்வர் பேட்டி
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில்; அதிக அளவிலான மழை பெய்துள்ளது. மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நின்றதும் ஒரு மணி நேரத்தில் நிலமை சரியாகிவிடும் என்றார்.