7 பேரிடம் ரூ.1.25 லட்சம் அபேஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை இழந்துள்ளனர்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ஜெயா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், குறைந்த வட்டியில் ரூ. 2 லட்சம் வரை கடன் பெற்று தருவதாகவும், அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறினார். அதை நம்பி ரமேஷ், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு 55 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். வைத்திக்குப்பத்தை சேர்ந்த அலோக் குமார் சாஹூ என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசினார். அதை நம்பிய குமார் சாஹூ தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து, அவரது கணக்கில் இருந்து 50 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதேபோல், திருக்கனுார் அருள்ராஜ் 2 ஆயிரத்து 500, தர்மபுரி சோபியா 1,800, காரைக்கால் அருண்ராஜ் ராயப்பன் 5 ஆயிரத்து 500, தவளக்குப்பம் மாணிக்கம் 2,089, அரியாங்குப்பம், சண்முகா நகர் சசிகலா 9,000 என மொத்தம் 7 பேர் 1 லட்சத்து 25 ஆயிரத்து 889 ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.