750 ஏக்கர் நிலம் தொழில் முனைவோருக்கு 2 மாதத்தில் ஒதுக்கீடு: நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி : சேதராப்பட்டு பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் 750 ஏக்கர் நிலத்தை 2 மாதத்தில் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய இருக்கிறது என, அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். புதுச்சேரி பழைய துறைமுகவளாகத்தில் நடந்த சர்வதேச வணிக உச்சி மாநாட்டில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரி அரசு சேதராப்பட்டு பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் 750 ஏக்கர் நிலத்தை இன்னும் 2 மாதத்தில் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. புதுச்சேரியில் ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்கள் பொறியியல் துறையில் படித்து வெளியே வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் புதிய தொழிற்சாலைகள் புதுச்சேரியில் தொடங்குமாறு அழைக்கிறோம்' என்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசுகையில், 'புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர்கள் இங்கு தொழில் தொடங்க முன்வர வேண்டும். சுற்றுலாவில் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது புதுச்சேரி. அதே போன்று இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கும் சண்டிருக்கு அடுத்து உயர்நிலை கல்வி நிறுவனங்கள் புதுச்சேரியில் தான் உள்ளன. மனிதவள குறியீட்டில் உயர்ந்த நிலையில் இருக்கும் புதுச்சேரி, எல்லா வகையிலும் உகந்த இடமாக இருக்கிறது. தொழில் தொடங்க வருவோர் புதுச்சேரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.