உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் மோசடி வழக்குகளில் ரூ.8.81 கோடி மீட்பு சைபர் கிரைம் போலீசார் தகவல்

ஆன்லைன் மோசடி வழக்குகளில் ரூ.8.81 கோடி மீட்பு சைபர் கிரைம் போலீசார் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்தாண்டில் சைபர் கிரைம் மோசடியில், 3 ஆயிரத்து, 712 புகார்கள் பெறப்பட்டு, ரூ.8 கோடியே, 81 லட்சத்து, 53 ஆயிரத்து, 179 ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் பெறப்பட்ட புகார்களின் படி, இந்தாண்டில், ஆன்லைன் மோசடி இழப்பு தொகை 35 கோடியே, 17 லட்சத்து, 96 ஆயிரத்து, 143 ரூபாய். இதில் ரூ.8 கோடியே, 81 லட்சத்து, 53 ஆயிரத்து, 179 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றத்தில், 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த, 3மாதங்களில், ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 250 மொபைல்கள் மீட்கப்பட்டுள்ள. இவை சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இணைய மோசடிகளில் ஈடுபட்ட, 300 மொபைல் எண்கள் தடுக்கப்பட்டுள்ளன. லாஸ்பேட்டையை சேர்ந்த கோகிலா, போலி முதலீட்டு இணையதளத்தில் 18 லட்சத்து, 4 ஆயிரத்து 556 ரூபாயை இழந்தார். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டு 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: சைபர் கிரிமினல்கள் டிராய், மும்பை சைபர் கிரைம், மற்றும் பெடக்ஸ் ஆகியவற்றில் இருந்து அழைப்பதாக அச்சுறுத்தி, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கி கணக்கு போன்றவற்றின் மூலம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்ட விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், மோசடி செய்பவர்கள் 'டிஜிட்டல் கைது' என, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யாததற்காக, பணம் கொடுக்குமாறு மிரட்டி வருகின்றனர். பொதுமக்கள் யாருக்கேனும் அத்தகைய அழைப்பு வந்தால், 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ