காசு வைத்து சூதாடிய 9 பேர் கைது: பணம், கார் பறிமுதல்
புதுச்சேரி: முதலியார்பேட்டை அருகே ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். உப்பளம், சாரதாம்பாள் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக, முதலியார்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முகமது ேஷக் அலாவுதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, ஓட்டலில் உள்ள ரூமில் 9 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.47,060 ரொக்கம், 9 மொபைல் போன்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். சூதாடிய காராமணிக்குப்பம் பாஸ்கர்,52; அரியாங்குப்பம் சிவராமன்,53; வம்பாகீரப்பாளையம் ராபர்ட்,40; கோவிந்தசாலை கோபி,42; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை சுரேஷ்குமார்,47; புதுச்சேரி வேணுகோபால்,45; திண்டிவனம் அடுத்த அவரப்பாக்கம் சேட்டு,42; புதுச்சேரி சாரம் சங்கர்குமார்,50, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பாஸ்கர், இவர்களை சூது விளையாட அழைத்ததால் வந்ததாக தெரிவித்தனர். கைதான பாஸ்கர் மீது முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரு கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து போலீசார், சூதாட்டம் விளையாடுவதற்கு அனுமதித்த ஓட்டல் ரூம் ஊழியர்கள் சுதாகர், சிரியேல் ஆகியோரையும் கைது செய்தனர். ஓட்டல் உரிமையாளரை தேடி வருகின்றனர். ஓட்டலில் சட்டவிரோதமாக சூது விளையாட அனுமதித்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஓட்டலை மூட நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.