உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 23 ஆயிரம் கி.மீ., காதல் பயணம்.... பாரீசில் இருந்து பைக்கில் வந்த இளம்ஜோடி

23 ஆயிரம் கி.மீ., காதல் பயணம்.... பாரீசில் இருந்து பைக்கில் வந்த இளம்ஜோடி

பி ரான்ஸ் நாட்டின் அழகிய தலைநகரான பாரீசில் வசிப்பவர் கெவீன்,30; புதுச்சேரி வெங்கட்டா நகர் தான் பூர்வீகம். தாய் தந்தையர் தலைமுறையாக பிரான்சில் வாழ்ந்தாலும், மனத்தின் ஓரத்தில் எப்போதும் சொந்த ஊர் புதுச்சேரி என்பதையே நினைவுகளாக தாங்கியிருந்தது. கெவீன் ஒருநாள், தனது இளம் மனைவி ஈம்மாவிடம், 'எனது பூர்வீகமான புதுச்சேரியை உனக்குக் காண்பிக்கணும்… புதுச்சேரிக்கு பைக்கில் போய் பார்க்கனும்' என்றார். அதற்கென்ன போயிடலாம் என ஈம்மாவும் பச்சை கொடி காட்ட அதுவே ஒரு கனவுப் பயணத்தின் துவக்கமாகவும் அமைந்தது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள யமாகா பைக்கில் வரைபடத்தை மடித்து, வைத்துக் கொண்டு ஐரோப்பாவின் குளிர் காற்றை வென்றவாறு இருவரும் கடந்த ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரியை நோக்கி சாலை மார்க்கமாகவே பயணத்தை துவக்கினர். இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைகள், ஸ்லோவேனியாவின் பசுமை பள்ளத்தாக்குகள், குரோஷியாவின் கடற்கரை அழகுகள், கிரீஸின் நீல வானம், துருக்கியின் சூரிய ஒளி சாலைகள் முடிந்த இடத்தில் கனவு தொடர்ந்தது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டதால், அவர்கள் பயணம் ஒரு நொடிக்கு நின்றது. ஆனால் கனவுகள் நிற்கவில்லை. அவர்கள் தங்கள் வாகனத்தை விமானம் மூலம் டில்லிக்குக் கொண்டு வந்து, அங்கிருந்து மீண்டும் பைக்குகளை திருப்பி புதுச்சேரியை நோக்கி பயணத்தை துவக்கினர். 23 ஆயிரம் கி.மீ., துாரத்தை 5 மாதங்களாக மழை, வெயில், பனி, புயல் அனைத்தையும் கடந்து, நேற்றுமுன்தினம் புதுச்சேரியின் நிலத்தில் கால்வைத்தனர். வெங்கட்டா நகரை அடைந்தபோது பாரீசில் இருந்து பைக்கில் வந்த ஜோடி க்கு, அவர்களது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த நிமிடம், கெவீனின் கண்களில் கண்ணீரும், பெருமையும் கலந்து ஒளிர்ந்தது. புதுச்சேரியின் கலாசாரம், உணவு, மொழி அனைத்திலும் ஈம்மாவும் மயங்கிப் போனார். ஈம்மா கூறுகையில், 'புதுச்சேரியை பற்றி கெவின் சொல்லும்போது நம்பவில்லை. ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது. புதுச்சேரியும் பிரான்ஸ் மாதிரி தான் இருக்கு என்றார் நெகிழ்ச்சியுடன். இருவரும் நினைவுகள் நிரம்பிய இதயத்துடன், டிசம்பர் மாதத்தில், விமானம் மூலம் பாரீசுக்கு திரும்ப திட்டமிட்டுள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Saran
நவ 02, 2025 16:35

Félicitations au couple This kind of event shows that Pondichéry doesn't forget the history. The réal Pondichéry citizens are becoming minority in their own state. The people of TN are migrating more in number to Pondichery, so the Tamil nadu language is demolishing the French language in the city.


முக்கிய வீடியோ