மரப்பாலம் சிக்னல் கம்பத்தில் கார் மோதி விபத்து
புதுச்சேரி : மரப்பாலம் அருகே கார் மோதி புதிதாக அமைத்த டிராபிக் சிக்னல் கம்பம் சாலையில் சரிந்தது.புதுச்சேரி முழுதும் உள்ள டிராபிக் சிக்னல்கள் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக பழைய சிக்னல் கம்பங்கள் அகற்றி புதிய டிராபிக் சிக்னல் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. மரப்பாலம் சந்திப்பு புதுச்சேரி நகராட்சி வருவாய் பிரிவு அலுவலக கட்டடம் எதிரில், கழிவுநீர் வாய்க்கால் பாலத்திற்கு முன், ஒரு சிக்னல் கம்பம் கடந்த சில நாட்களுக்கு முன், நடப்பட்டது. நேற்று காலை சென்னை தரமணியைச் சேர்ந்த அகஸ்டியன் ரூபன் மற்றும் அவரது நண்பர்கள், மாருதி ஸ்விப்ட் காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர்.மதியம் 1:00 மணிக்கு மரப்பாலம் அருகே சென்றபோது, சென்டர் மீடியனில் இருந்த புதிய டிராபிக் சிக்னல் கம்பத்தின் மீது கார் மோதியது. இதில் புதிய சிக்னல் கம்பம் உடைந்து சாலையில் சாய்ந்தது.சாய்ந்திருந்த சிக்னல் கம்பத்தை போக்குவரத்து கிழக்கு பிரிவு உதவி சப்இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையிலான போலீசார் கழற்றி அகற்றினர். டிராபிக் சிக்னல் கம்பம் அமைத்த நிறுவனமும், விபத்து ஏற்படுத்திய நபரும் சமாதானமாக சென்று விட்டதாகவும், விபத்தால் உடைந்த கம்பம் மீண்டும் அமைப்பதிற்கான தொகையை கார் டிரைவர் அளிப்பதாக வாக்குறுதி அளித்ததால் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
வழக்கு இல்லை
நடுரோட்டில் உள்ள சிக்னல் கம்பத்தின் மீது மோதிய கார், சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள், பைக்கில் செல்வோர் மீது மோதுவதற்கு அதிக நேரம் ஆகாது. விபத்து ஏற்படுத்திய நபர் மதுபோதையில் இருந்தாரா என்பதை கூட ஆய்வு செய்யாமலும், வழக்கு பதிவு செய்யாமல் கார் டிரைவரை அனுப்பி வைத்தது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.