உயர் போலீஸ் அதிகாரி மீது சரமாரி புகார் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு
புதுச்சேரி : போக்குவரத்து போலீசாரின் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில், போலீஸ் அதிகாரி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்தால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார். எஸ்.பி., செல்வம் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சப்இன்ஸ்பெக்டர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பொதுமக்கள் கூறியதாவது; புதுச்சேரியில் தினசரி டிராபிக் பிரச்னை அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் டிராபிக் சிக்னல்கள் ஸ்தம்பித்து விடுகின்றன. பிரிலெப்ட் சாலையில் ஆட்டோக்கள், வாகனங்களை நிறுத்தி விடுவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை.டிராபிக் சிக்னல்களில் போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பது இல்லை. அமைச்சர், வி.ஐ.பி.,க்கள் வரும்போது மட்டும் சிக்னலில் நிற்கின்றனர். வி.ஐ.பி.,களுக்காக தினசரி பல முறை வெகு நேரம் வாகனங்களை காக்க வைக்கின்றனர். இதனை மாற்ற வேண்டும்.பள்ளிகள் துவங்கும் நேரம், முடியும் நேரம் ஒரே மாதிரியாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் படையெடுத்து செல்கின்றன. நகர சாலைகளில் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க பள்ளிகள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.புதுச்சேரியில் அனுமதியின்றி ஓடும் 600க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும். பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் ஹாரன்களால் சாலையில் செல்ல அச்சமாக உள்ளது.போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், விலையுர்ந்த மோட்டார் பைக்கில் நகர பகுதியில் அதிவேகமாக செல்லும் போது அதில் வரும் இரைச்சல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பைக்கிற்கு முன்னாலும், பின்னாலும் காரில் வரும் போலீசார் பொதுமக்களை விரட்டுகின்றனர். இதனால் சாலையில் வாகனம் செல்ல அச்சமாக உள்ளது என புகார் தெரிவித்தனர்.இதனை கேட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.