ரெட்டியார்பாளையத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.37 லட்சம் நகை, பணம் கொள்ளை ஆந்திராவை சேர்ந்த நபர் கைது : நகை , பணம் மீட்பு
புதுச்சேரி, : ரெட்டியார்பாளையத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற ஆந்திராவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், விவேகானந்தா நகர் விரிவாக்கம், கோல்டன் அவென்யூ, 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 67; இவர் கடந்த பிப்.16ம் தேதி சென்னையில் வசித்து வரும் மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, 18 ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மர்ம நபர்களால் வீட்டின் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அலமாரியில் இருந்த 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 55 சவரன் நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச்சென்றனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்தசம்பவத்தில் ஆந்திரப் பிரதேசம், கோமராஜூலங்கா, சத்திவரி வீதியை சேர்ந்த துவாரபுடி கிருஷ்ணா மகன் துவாரபுடி வெங்கடேஸ்வர் , 34; என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார் கடந்த 23ம் தேதி ஆந்திரப்பிரதேசம், விஜயவாடா ரயில் நிலையம் அருகே பதுங்கிருந்த துவாரபுடி வெங்கடேஸ்வர்ரை கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்தனர். விசாரணையில், சென்னையில் இருந்து வாடகை காரில் புதுச்சேரி வந்து , ஸ்ரீதரன் வீட்டில் நகை ,பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரிடம் இருந்து ஹைதராபாத், ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 30 சவரன் நகைகள், 4 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டை உடைக்க பயன்படுத்திய 2 இரும்பு கம்பிகள், முகமுடி உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை பிடித்து திருட்டு பொருட்களை மீட்ட இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ராஜீ, ஜெயக்குமார், அரிகரன், கோவிந்தன், கந்தவேல், சஞ்சய்குமார், இசைவேந்தன், சுப்பாராவ், நிர்மல் துர்கா பிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினரை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார். கைது செய்யப்பட்ட இவர் மீது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 18 வீடுகளில் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. திருடிய பணத்தை நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று ஆடம்பர செலவு செய்ததுடன், கிரிக்கெட் பந்தயத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.