பொது அறிவை வளர்க்கும் களஞ்சியம்
புதுச்சேரி : 'தினமலர்- பட்டம்' இதழ் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது என மெகா வினாடி வினா போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். முதலிடம் பிடித்த புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவர் நவீன் பிரியன்:'தினமலர் -பட்டம்' வினாடி வினா போட்டியில் பங்கேற்று, முதல் பரிசு பெற்றுள்ளோம். இதற்காக, நாங்கள் கடினமாக உழைத்து உள்ளோம். கடந்த 3, 4 மாதங்களாக பட்டம் இதழின் ஒவ்வொரு பக்கங்களாக, ஒவ்வொரு வரிகளாக படித்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. 'பட்டம்' இதழ் மூலம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது.மாணவர்கள் மற்றும் மக்கள் பொருளாதாரம், உயிரியல், இயற்பியல் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், படிப்பதற்கு ஆர்வம் மிக்கதாகவும் உள்ளது.மாணவர் பூவராகவன்:கடந்த ஆண்டு நடந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்றபோது, வெற்றி பெற முடியவில்லை. அதனால், இந்தாண்டு பட்டம் இதழின் அனைத்தையும் ஆழ்ந்து படித்து, முயற்சி செய்ததால், முதலிடம் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு காரணமான எங்களது பள்ளிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்இரண்டாம் இடம் பிடித்த பண்ருட்டி, திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாலபாரதி:'பட்டம்' வினாடி-வினா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பட்டம் இதழில் உள்ள இயக்கும் இயற்பியல், வேதியியல் மாற்றம் தலைப்புகளில் வரும் செய்திகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை அனைத்தும் எனது பாடப்பிரிவு தொடர்பாக உள்ளது. பட்டம் நிறைய செய்திகளை கற்றுக்கொடுக்கிறது. அதற்காக தினமலர் பட்டம் இதழ் குழுவினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மாணவி நித்யா ஸ்ரீ: பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற வேண்டுமென பல மாதங்களாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். பட்டம் இதழில் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் தொடர்பான தலைப்புகளை விரும்பி படிப்பேன். இதில், பாடத் திட்டங்களை தாண்டி நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.மூன்றாமிடம் பிடித்த புதுச்சேரி, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவர் ராகவ்: பள்ளியில் உணவு இடைவெளியின் போது கூட ஆசிரியைகள் மீனாட்சி, சுகன்யா ஆகியோர் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி முதல்வரும் எங்களை ஊக்கப்படுத்தி, தேவையான உதவிகள் செய்தார். பட்டம் இதழில் பொது அறிவு தொடர்பான செய்திகள், வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பல்வேறு கருத்துகளை தெரிந்து கொள்ள முடிகிறது. பட்டம் இதழ் படிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மாணவர் ருத்திரிஸ்வரன்:போட்டியில் மூன்றாம் இடம் பெற்றது மகிழ்ச்சி. இன்னும் கடினமாக முயற்சி செய்திருந்தால், முதலிடம் பெற்றிருப்போம். பட்டம் இதழ் படிப்பதால், நம்முடைய அறிவை வளர்த்துள்ள முடியும். தமிழ் மொழி கற்றலும் அதிகரிக்கும். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.