| ADDED : மார் 16, 2024 11:20 PM
காரைக்கால்: காரைக்காலில் தலைமை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.காரைக்கால், மாதா கோவில் வீதியில் தலைமை பொதுப்பணித்துறை அலுவலம் மூன்று தளங்களில் செயல்பட்டு வருகிறது.இதில் மாவட்டத்தில் உள்ள சாலைப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான அலுவலகம் செயப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழங்கம் போல் அலுவலகம் பணிகள் முடிந்து, அனைவரும் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை 7:30 மணியளவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முதல் தளத்தில் இருந்து புகை வெளியேறியது.பின்பக்கத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த நகர தீயணைப்புத்துறை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர், மின்சாதன பொருட்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.