செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு சாதனையாளர் விருது
பாகூர்: செந்தில்குமார் எம்.எல்.ஏ.,வின் சமூக சேவையை பாராட்டி , வி.ஐ.டி., பல்கலைக்கழகம், சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. குடியரசு தினத்தையொட்டி, வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி மலை சுப்பிரமணியன், சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இவ்விழாவில், பெரு நிறுவன நிர்வாகி, தொழில் முனைவோர், தொழில்நுட்பம், சமூகம் மேம்பாடு, இளம் சாதனையாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பாகூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமாருக்கு, அவரது சமூக சேவையை பாராட்டி, சமூக மேம்பாட்டு பிரிவில் பல்கலைக்கழகம் சார்பில் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பல்கலைக்கழக செயல் இயக்குனர் சந்தியா பெண்டா ரெட்டி, துணை தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.