அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் சாதனை
கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு புதுச்சேரி: புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில், நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது; மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை வளமாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்கள் எல்லாம் சுயசார்புடன், சுய மரியாதையுடன் வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவியாக உள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நிதி உதவி, நலத்திட்டங்கள் வெறும் சலுகைகள் கிடையாது. அவர்களின் சமுதாய உரிமைகளை நிலை நாட்டுவதிற்கு மத்திய மாநில அரசுகள் எடுக்கும் முயற்சியின் அடையாளம்.உடல் குறைபாடு உள்ள 40 வயது நபருக்கு வேலை கிடைக்கிறது. சில டாக்டர்கள் அவருக்கு உடல் குறைபாடு உள்ளது என்றும், சில டாக்டர்கள் அது குறைபாடு இல்லை என, கூறுகின்றனர். இதனால் அவருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அரசு எடுக்கும் முயற்சிக்கு தன்னார்வ அமைப்பு, சமுதாயமும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கடமை உணர்வோடு, அக்கறையோடு வேலை செய்வர். ஏனென்றால் அவர்களால் மற்றவர் வலியை, வேதனையை, தேவைகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பெரிய சாதனையும் நம்பிக்கையில் இருந்து தான் தொடங்குகிறது. கலை, அறிவியல் தொழில்நுட்பம், தொழில்துறை, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் சாதனை படைத்து வருகின்றனர். உங்களுடைய பயணம் மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.