சேறும் சகதியுமான விளையாட்டு திடல் சீரமைப்பதற்கு நடவடிக்கை தேவை
பாகூர்: பாகூர் பேட்டில் உள்ள விளையாட்டு திடலில், மழை நீர் தேங்காத வகையில், மண் கொட்டி மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாகூர் பேட் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, விளையாட்டு திடல் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், இடம் கையப்படுத்தப்பட்டு விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. இங்கு, அப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் கபடி, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, கபடி மற்றும் வாலிபால் விளையாட்டின் மூலம் பலர் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்கள், வழிகாட்டியாக இருந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.இந்நிலையில், விளையாட்டு திடல் சாலையை விட தாழ்வான நிலையில் இருப்பதால், மழை காலங்களில் மைதானம் முழுதும் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர் கதையாக உள்ளது. அங்கு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது.சமூக விரோதிகள் காலி மதுபாட்டில்களை விளையாட்டு திடலிலேயே உடைத்து வீசி செல்வதால், பயிற்சி பெறும் மாணவர்கள், இளைஞர்களின் கால்களை அவை பதம் பார்த்து விடுகிறது.சில நாட்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் விளையாட்டு திடல் மூழ்கியது. தற்போது சேறும், சகதியுமாக விளையாட்டு திடல் மாறி துர்நாற்றம் வீசி வருவதால், இளைஞர்களின் பயிற்சி தடைப் பட்டுள்ளது.எனவே, பாகூர் பேட்டில் உள்ள விளையாட்டு திடலில் மழை நீர் தேங்காத வகையில், மண் கொட்டி மேம்படுத்திடவும், அங்கு நடைபெற்று வரும் சமுக விரோத செயல்களை தடுத்திடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.