புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ரூ. 350 கோடி: மத்திய அரசிடம் கோரிக்கை
புதுச்சேரி: மத்திய அரசிடம் ரூ.350 கோடி கூடுதல் நிதி கோரியுள்ள புதுச்சேரி அரசு, திருத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடப்பு நிதியாண்டில் ஏப்., 1ம் தேதி முதல் ஆக., 31ம் தேதி வரையிலான ஐந்து மாதங்களுக்கான அரசின் அன்றாட செலவினங்களை மேற்கொள்ள சட்டசபையில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2026–27-ம் நிதியாண்டிற்கான ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். பின், துறைவாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் வேகமெடுத்தன. பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த நிதியாண்டின் இறுதிக்குள் வரவு, செலவுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். எதிர்பாராத புதிய செலவினங்களையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகலாம். இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப, அடுத்தடுத்து நடைபெறும் சட்டசபைக் கூட்டங்களில் திருத்திய பட்ஜெட் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், புதுச்சேரி அரசின் திருத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணியில் அனைத்து அரசுத் துறைகளும் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் இதுவரை கிடைத்த வருவாய், மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் மற்றும் இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. டிச., இரண்டாவது வாரத்திற்குள் அனைத்து துறைகளின் திருத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் திருத்திய பட்ஜெட் ஜன., முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. 2026–27ம் நிதியாண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட ரூ.14,300 கோடி பட்ஜெட்டில், ரூ.12,115 கோடி வருவாய் செலவினங்களுக்கும், ரூ.2,185 கோடி மூலதனச் செலவினங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, 2021–22ம் நிதியாண்டில் மொத்த செலவினத்தில் 1.66 சதவீதம் ரூ.162.78 கோடியாக இருந்த மூலதனச் செலவினம், 2026–27ம் நிதியாண்டில் 7.93 சதவீதம் ரூ.1,134.58 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூலதனச் செலவினம் ரூ.971.80 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. மூலதனச் செலவினம் அதிகரித்துள்ளதாலும், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதால், மத்திய அரசிடம் கூடுதலாக ரூ.350 கோடி நிதி வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூடுதல் நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், திருத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை புதுச்சேரி அரசு தீவிரப்படுத்தியுள்ளது
வருவாய் எவ்வளவு
இந்த பட்ஜெட்டில் மாநில அரசின் சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.7,890.41 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியையும் உள்ளடக்கிய மத்திய அரசின் நிதி உதவி ரூ.3,517.86 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய சாலை நிதியாக ரூ.25 கோடியும், மத்திய அரசின் திட்டங்களின்கீழ் ரூ.531.80 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான கடனையும் சேர்த்து, ரூ.2,148.69 கோடி வரையிலான நிகரக் கடன் வரம்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தவிர, மத்திய அரசின் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின்கீழ் ரூ.186.24 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.