ஆதிதிராவிடர்களுக்கு வேட்டி சேலைக்கு பதிலாக ரூ. 1,000 முதல்வர் வழங்கல்
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக தலா ஒரு நபருக்கு ரூ. 1000 வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியான ஆதிதிராவிடர் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1000 நிதி உதவி வழங்கும் துவக்க விழா சட்டசபையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி நிதி உதவி வழங்கி துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 98,647 பயனாளிகளும், காரைக்காலில் 23,464 பேர், ஏனாமில் 5,501 என மொத்தம் 1,27,612 பேருக்கு, தலா ரூ. 1000 வீதம் மொத்தம் ரூ. 12.76 கோடி நிதி உதவி, பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.