நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள் உரிமம் ரத்து செய்ய அ.தி.மு.க., வலியுறுத்தல்
புதுச்சேரி: நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க, மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை; மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை. அந்த கடமையில் இருந்து கடந்த இரு அரசுகளும் தவறியுள்ளது. தற்போது மாசடைந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு தொகுதிகளில் வழங்கப்படும் குடிநீரில், கழிவு நீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வருகிறது. அதனை குடித்த 40க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலம் கலந்த கழிவுநீர் நேரிடையாக கடலில் கலப்பதால், கடல்வாழ் உயிரினங்களான மீன், இறால், நண்டு போன்றவை பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அதனை சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எதிர்கால சந்ததியினருக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால், ஏரி, குளங்கள் துார்வாரப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட வேண்டும். அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்க வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனத்தின் அனுமதியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் கவர்னர், முதல்வர் நேரடியாக தலையிட்டு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.