பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மீது குற்றச்சாட்டு
புதுச்சேரி:லாஸ்பேட்டை ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் திறக்கப்படாததால், மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர். லாஸ்பேட்டையில், ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிர்வகித்து வரும் இந்த மைதானத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த 5 நாட்களாக ஸ்கேட்டிங் மைதானம் திறக்கப்படாததால், மாணவர்கள் தினமும் பயிற்சி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனை கண்டித்து, நேற்று மாலை மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும், மைதானம் முன் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து ஸ்கேட்டிங் பயிற்சியாளர் எட்வின் கூறுகையில், 'பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன், தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. அசோசியேஷனை, புதுச்சேரி விளையாட்டுத்துறை மற்றும் ஒலிம்பிக் சங்கத்துடன் இணைக்கவில்லை. ஸ்கேட்டிங் மைதானத்தை புனரமைத்ததில் முறைகேடு நடந்துள்ளது. அங்கீகாரம் இல்லாத இந்த மையதானத்தை இந்திய விளையாட்டு கூட்டமைப்புடன் இணைக்க வேண்டும். முறைகேடு தொடர்பாக அரசு விசாரித்து, அசோசியேஷன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்றார்.