மேலும் செய்திகள்
வீடு புகுந்து மூதாட்டியிடம் 4 சவரன் நகை திருட்டு
20-Sep-2025
புதுச்சேரி: சி.ஐ.டி., போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 3 சவரன் செயினை நுாதன முறையில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான பட்டானுார், கலைவாணர் நகர் விரிவு, புதுநகரை சேர்ந்தவர் கருணாநிதி மனைவி சாந்தி, 61; வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், குறிஞ்சி நகர், கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் தனது மகனை பார்க்க சென்றார். குறிஞ்சி நகர் விரிவு, 2வது குறுக்கு தெருவில் சென்றபோது, அங்குள்ள மரத்தின் கீழே நின்றிருந்த 2 நபர்கள், சாந்தியை அழைத்து, தங்கள் போலீஸ் எனவும், இப்பகுதியில் செயின் பறிப்பு அதிகம் நடப்பதால், சாதாரண உடையில் கண்காணித்து வருவதாகவும், இங்கு செயினை போட்டுக் கொண்டு செல்ல வேண்டாம். செயினை கழட்டி பையில் வைத்து கொண்டு செல்லுமாறு கூறினர். பின், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை வாங்கி, காகிதத்தில் மடித்து பையில் வைத்தனர். அதன்பிறகு, மகன் வீட்டிற்கு சென்ற மூதாட்டி, பையில் இருந்த காகித பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க செயினுக்கு பதிலாக ஜல்லிக்கல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மூதாட்டி சாந்தி அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை பார்வையிட்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
20-Sep-2025