வழுதாவூர் ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னபிஷேகம்
புதுச்சேரி: வழுதாவூர் ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட காய்கறிகளை கொண்டு சுவாமிக்கு அன்னபிஷேகம் நடந்தது. புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான வழுதாவூர் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு விவசாயம் பெருகவும், விவசாயிகள் நலம்பெற வேண்டியும் கேரட், பீன்ஸ், வாழைப்பூ, வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் 100 கிலோ சாதம் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்னபிஷேகம் நடந்தது. இதில், வழுதாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.