கலிதீர்த்தாள்குப்பம் அரசு பள்ளியில் தடகள போட்டிகள் துவங்கின
திருபுவனை; கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் சார்பில், நான்காம் வட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப்போட்டிகள் நேற்று துவங்கியது.விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அறிவழகி முன்னிலை வகித்தார். உடல் கல்வி ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் கொடியேற்றி, போட்டிகளை தொடங்கி வைத்தார். விளையாட்டுத்துறை துணை இயக்குனர் வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார்.இப்போட்டியில் 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் 50 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் பிரேம்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் ரஷீத் அகமது நன்றி கூறினார்.உடற்கல்வி விரிவுரையாளர் சேவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி, நந்தினி உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர். இரண்டாம் நாள் போட்டி இன்று நடக்கிறது.