உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்களில் முதல் மூன்று நிலைகளின் செயல்முறைகளை இந்த வாரம் பார்ப்போம்.

சமஸ்திதி (அ) சமநிலை ஆசனம்

நேராக நின்று கால் பாதங்கள் ஒன்றோடொன்று தொடாமல், அருகருகே வைத்து, கைகளை பக்கவாட்டில் தளர் நிலையில் இருக்க வேண்டும். மோவாய் மேல் நோக்கி, தோள்கள் பின்நோக்கி இருக்க வேண்டும். பக்கவாட்டில் இருந்து பார்த்தால், கால்கள், இடுப்பு, தோள், தலை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உடல் எடை இரு பாதங்களிலும் சமமாக உணர்ந்து, மூச்சை நன்கு இழுத்து வெளியிடவும்.

பாத அங்குஷ்த ஆசனம்: ( கால் கட்டை விரலை பிடிக்கும் நிலை)

மூச்சை உள்ளிழுத்தபடி குதித்து கால்களை ஒரு அடி அகலத்தில் வைத்து, கைகளை தலைக்கு மேல் நீட்டி துாக்கவும். அந்த நீட்டுதலால் ஏற்படும் உணர்வை இடுப்பு, விலா எலும்பு மற்றும் தோள்பட்டைகளில் நன்கு உணரவும்.மூச்சை வெளியிட்டபடி தரையை நோக்கிச் சென்று, ஒவ்வொரு காலிலும் உள்ள கட்டை விரலை ஆள்காட்டி விரல் மற்றும் கை கட்டை விரலால் கொக்கி போன்று இருகப்பற்றவும். மூச்சை உள்ளிழுத்தபடி தலையை முடிந்த அளவிற்கு உயர்த்தி முதுகுத்தண்டை நீட்டவும். கட்டை விரலை நன்கு இருக்கி பிடித்து மூச்சை வெளியிட்டபடி தலையை கால் முட்டிகளுக்கு நடுவே கொண்டு வந்து, கை முட்டிகளை வெளிநோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நீண்டு சுவாசித்தபடி மெதுவாக 10 வரை எண்ணவும்.கட்டை விரலை விட்டுவிட்டு, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே மேல்நோக்கி எழுந்து கைகளை தலைக்கு மேல் நீட்டியபடி வைக்கவும். மூச்சை வெளியிட்டபடி குதித்து சமஸ்திதி நிலைக்கு திரும்பவும். உடல் தளர்வு நிலை அடையும்வரை அந்த நிலையிலேயே இருந்து மூச்சை இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு இருமுறை செய்ய வேண்டும்.

பாத ஹஸ்த ஆசனம்- கை கால் தொடும் நிலை

சமஸ்திதி ஆசனத்தில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி, கைகளை தலைக்கு மேல் வைத்து குதிக்கவும். மூச்சை வெளியிடும்பொழுது கீழே குனியவும். கைகளை கால்களுக்கு அடியில் வைத்து, மூச்சை உள்ளிழுத்து தலையை துாக்கி, மூச்சை வெளியிட்டு தலையை கால் முட்டிகளுக்கு இடையே முடிந்தவரை முயற்சி செய்து நிறுத்தவும். கை முட்டி வெளிநோக்கி வைத்து 10 எண்ணும் வரை ஆழ்ந்து சுவாசிக்கவும்.பின், மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை விடுவித்து தலைக்கு மேல் கொண்டு சென்று, மூச்சை வெளியிட்டபடி சமஸ்திதி நிலைக்கு திரும்பவும். உடல் தளர்வடையும் வரை நின்று, மீண்டும் இருமுறை செய்யவும்.சமநிலை ஆசனங்களின் பிற நிலைகளின் செயல்முறைகள் அடுத்த வாரம்....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ