பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை... பாதிப்பு; புதுச்சேரியில் 10 இடங்களில் மறியல்; 2,500 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், இண்டியா கூட்டணி சார்பில் நடந்த பந்த் போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.மத்திய அரசை கண்டித்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுதும் பொது வேலை நிறுத்தத்திற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தன. புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் குறைந்த பட்ச ஊதிய நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று பந்த் போராட்டம் நடந்தது.காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடந்த பந்த் போராட்டத்தில் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போ உள்ளிட்டவை இயங்காததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பந்த் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை மார்க்கெட்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், முக்கிய வீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, புஸ்சி வீதி, மிஷன் வீதி, ஓயிட் டவுன் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.சேதராப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.பந்த் போராட்டத்தை முன்னிட்டு இண்டியா கூட்டணி கட்சியினர், காலை 10:00 மணிக்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், சம்பத், அனிபால் கென்னடி, தி.மு.க., அவை தலைவர் சிவக்குமார், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை அருகே இருந்து ஊர்வலமாக சென்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள புது பஸ் நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து, நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் தங்க வைத்து, மதியம் 12:00 மணிக்கு விடுவித்தனர்.இதேபோல், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, இந்திரா சிலை சதுக்கம், சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனுார், வில்லியனுார், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கன்னியகோவில் உட்பட 10 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில முழுதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2,500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பின், விடுவித்தனர்.பந்த் துளிகள்: பந்த் போராட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.புது பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.தமிழகத்தில் இருந்து பிரசவத்திற்காக பஸ் நிலையம் வந்த பெண்ணை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக பி.ஆர்.டி.சி., பஸ் மூலம் ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர். காரைக்காலில் மாங்கனி திருவிழா, பாகூரில் தேர் திருவிழா முன்னிட்டு, அங்கு பந்த் போராட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அனைத்து அரசு ஊழியர்களும் நேற்று வழக்கம் பணிக்கு வந்திருந்தனர்.ஓட்டல்கள் மற்றும் சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள் மூடப்பட்டதால், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வெளிமாநில பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.