உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒட்டுமொத்த புதுச்சேரி நகரமும் நெரிசலில் ஸ்தம்பித்தது: அமித்ஷா வருகை ஏற்பாட்டில் மெகா குளறுபடி

ஒட்டுமொத்த புதுச்சேரி நகரமும் நெரிசலில் ஸ்தம்பித்தது: அமித்ஷா வருகை ஏற்பாட்டில் மெகா குளறுபடி

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி, குளறுபடியான போக்குவரத்து மாற்றங்களால், ஒட்டுமொத்த நகரமுமே முடங்கிப்போய் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகினர். புதுச்சேரி போலீசாருக்கு, ஜனாதிபதியின் கலர்ஸ் விருது வழங்க மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்தார். அவரது வருகையையொட்டி, ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல், கோரிமேடு, ஈ.சி.ஆர்., மற்றும் 100 அடி ரோடு ஆகிய முக்கிய சாலைகளில் போதிய திட்டமிடுதல் இன்றி திடீரென போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மாற்றுப் பாதைகள் என்ன என்பதை காவல் துறை தெளிவாக வழிகாட்டாமல், அனைத்து சாலைகளையும் திடீரென மதியம் மூடினர். இதனால், மதியம் 1:00 மணி முதல், மாலை 3:30 மணி வரை நகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1.5 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு சாலையிலும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக எங்கும் நகர முடியாமல் வாகனங்களிலேயே குழந்தைகளுடன் சிக்கித் தவித்த பொதுமக்கள், கொளுத்தும் வெயிலிலும், நெரிசலிலும் கொந்தளிப்பின் எல்லைக்கே சென்றனர். சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருந்து பொறுமையிழந்த வாகன ஓட்டிகள், அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையிலும், சிக்னல்களிலும் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு மக்களை தவிக்க வைத்து வேடிக்கை பார்க்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்து உத்தரவிட்டது என்று தொடர் ஹாரன் சத்தங்களை எழுப்பியப்படியே இருந்தனர். இதனால் சாலைகள் அனைத்தும் கூச்சலும், குழப்பமாக போர்க்களம் போல காட்சியளித்தது. வி.ஐ.பி., வருகைக்காக பொதுமக்களை இப்படி நரக வேதனையில் தள்ளுவது சரியா... இது தான் உங்களின் மாற்றமா... இதுக்கு தான் நாங்க பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட்டோமா... மக்கள் படும் அவதி புதுச்சேரி பா.ஜ., தலைவர்களுக்கு தெரியுமா... என பொதுமக்கள் கொந்தளித்தனர். போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள், அமித்ஷாவிடம் நல்ல பெயர் எடுக்க இந்த குளறுபடிகளை செய்தார்களா... வேலைக்கு செல்பவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைவரும் ரத்தக் கொதிப்பில் தவித்ததற்கு யார் பொறுப்பேற்பது... என நடுரோட்டில் வெயிலில் தவித்த மக்கள் சாபமிட்டனர். குறிப்பாக, ராஜிவ் காந்தி மகளிர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் இந்திரா சிக்னலிலும், ராஜிவ் சிக்னலிலும், 100 ரோடி சாலையிலும் 45 நிமிடங்களுக்கு மேலாக சிக்கிக்கொண்டு தவித்தனர். பிரசவம் நடக்கும் மருத்துவமனை உள்ள சாலையை தடுக்க போக்குவரத்து போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது... தலைவரின் வருகைக்காக ஒட்டுமொத்த நகர மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பலிகொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று உச்சக்கட்ட கோபத்தையும்கொந்தளிப்பையும் பொதுமக்கள் வெளிப்படுத்தினர். எதிர்காலத்திலாவது வி.ஐ.பிக்கள் வரும்போது மக்கள் பாதிக்காதவாறு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கவர்னர், முதல்வர், துறை அமைச்சர்கள் நேரடியாகவே இதனை கண்காணிக்க வேண்டும். இப்படியே போனால் பா.ஜ., கூடாரம் காலியிடம் பாதுகாப்பு காரணத்திற்காக உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வி.ஐ.பிக்கள் வரும்போது போக்குவரத்தினை நிறுத்துவது சகஜம் தான். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உயர்பாதுகாப்பில் இருக்கின்றார். எனவே அவர் வரும்போதும், புறம்படும்போது கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் எடுத்துகொள்ளுவதும் ஒன்றும் தப்பில்லை. ஆனால் எந்தவிதமான முன் அறிவிப்பு இன்றி, மாற்று பாதையில் வாகனங்களை திருப்பிவிடாமல் 2 மணி நேரம்.. 3 மணி நேரம் வரை போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களுக்கு அவஸ்தை தருவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. இதே மாதிரி செய்ததால் தான் பா.ஜ., ஏற்கனவே ஜெயித்து இருந்த 6 எம்.எல்.ஏக்கள் நிலையில் இருந்து 4 ஆக மாறிவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் புதுச்சேரியில் பா.ஜ., கூடாராமே காலியாகிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை