தேனீ வளர்ப்பு பயிற்சி வேளாண் துறை அழைப்பு
புதுச்சேரி : புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள தேனீ வளர்ப்பு பயிற்சியில்' முகாமில் பங்கேற்று பயனடையுமாறு, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.வேளாண் துறை இணை இயக்குனர் (தோட்டக்கலை) செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மற்றும் புதுவை மாநில தேசியத் தோட்டக்கலை இயக்கம் மூலமாக, தேனீ பெட்டிகள், தேனீ குடும்பங்கள் மற்றும் இதர உபகரணங்கள் நடப்பு ஆண்டில் (2025-26), மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.தேனீ வளர்ப்பு, பயிர்களில் மகரந்த சேர்க்கையில் தேனீக்களின் முக்கியத்துவம், உப தொழிலாகவோ (அ) முழு நேரத் தொழிலாகவோ செய்யக்கூடிய வாய்ப்புகள், தேன் மற்றும் இதர பொருட்களின் விற்பனை வாய்ப்புகள் முதலியவைப் பற்றிய ஒரு நாள் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம் நாளை (20ம் தேதி) காலை 10:00 மணி முதல், புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது.பயிற்சியில் கலந்து கொண்டு மானிய விலையில் தேனீப்பெட்டிகள், தேனீ குடும்பங்கள் மற்றும் உபகரணங்கள் பெற்று பயனடைய விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்ப படிவத்துடன் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலினையும் இணைத்து, விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். எனவே, புதுச்சேரி மாநில விவசாயிகள் மற்றும் நகர வாசிகள் தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள தேனீ வளர்ப்பு பயிற்சியில் கலந்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.