ஆரோவில்லில் சைக்கிளத்தான் போட்டி பெங்களூருவை சேர்ந்தவர் முதலிடம்
வானுார், : ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த சைக்கிளத்தான் போட்டியில் பெங்களூருவைச் சேர்தவர் முதலிடம் பிடித்தார்.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, நேற்று சைக்கிளத்தான் போட்டி நடந்தது. ஆரோவில் 'கிரீன் ரைடர்ஸ்' சைக்கிள் குழு சார்பில், நடந்த போட்டி காலை 5:30 மணிக்கு செர்ட்டி டூயூடு வளாகத்தில் துவங்கியது.75 கி.மீ., துாரம் கொண்ட போட்டியில் 25 பேர், 52 கி.மீ., போட்டியில் 65 பேர் பங்கேற்றனர். அதில், 75 கி.மீ., போட்டியில் இடையஞ்சாவடி வழியாக புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் எறையானுார் வரை, 52 கி.மீ., போட்டியில், ஆரோவில்லில் இருந்து தென்கோடிப்பாக்கம் வரை சென்று திரும்பினர்.75 கி.மீ., போட்டியில், பெங்களூருவை சேர்ந்த சவ்ரப் சிங், 28; முதலிடத்தையும், கிரண்,27; இரண்டாம் இடத்தையும், ஆரோவில் கோபாலகிருஷ்ணன்,43; மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முதல் பரிசு பெற்றவருக்கு, இலங்கையில் 2025ம் ஆண்டு நடக்க உள்ள சைக்கிள் ரேஸ்சில் பங்கேற்க, தகுதி பெற்றதற்கான வவுச்சர் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டது.52 கி.மீ., போட்டியில் முதல் இடத்தை பிடித்த ஆரோவில்லில் வசிக்கும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மோரீஸ்,19; இரண்டாம் இடத்தை புதுச்சேரி அரசு மருத்துவமனை டாக்டர் டேனி,43; மூன்றாம் இடத்தை கோட்டக்குப்பம் மீன்ஹாச்,22; பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000 பரிசாக வழங்கப்பட்டது. .இது தவிர 'ஜாய் ஆப்' சைக்கிளிங் என மூன்றாவது பிரிவாக 25 கி.மீ., துாரத்திற்கு நடந்த போட்டியில் 57 பேர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பயணம் ஆரோவில் சுற்று வட்டாரத்திற்குள் சென்று முடிவடைந்தது. போட்டிகளில் பங்கேற்ற 147 பேருக்கும் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.