2 லட்சம் பேரை சேர்க்க பா.ஜ., இலக்கு புரந்தேஸ்வரி எம்.பி., பேச்சு
புதுச்சேரி, : புதுச்சேரியில் 2 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, புரந்தேஸ்வரி எம்.பி., பேசினார். புதுச்சேரியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை கடந்த 4ம் தேதி துவங்கி, 25ம் தேதியுடன் முடிந்தது. இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை, அக். 1ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது. பா.ஜ.,வின் முதற் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆய்வுக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில பா.ஜ., தலைவரும், புதுச்சேரி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாருமான புரந்தேஸ்வரி எம்.பி., பங்கேற்று பேசுகையில், 'புதுச்சேரியில் 2 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சி பொறுப்பாளர்கள் அதற்கேற்ப பணியாற்ற வேண்டும். கிளை கமிட்டியில் நாம் வலுவாக உள்ளோம். எனவே ஒவ்வொரு கமிட்டியிலும் 200 பேர் வீதம் சேர்த்தால் போதும் விரைந்து 2 லட்சம் பேரை சேர்த்துவிடலாம்' என்றார்.கூட்டத்தில், அமைச்சர் சாய்சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு, மாநில பொறுப்பாளர் மோகன் குமார், மாநில துணைத் தலைவர் அகிலன், மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.