உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ.,வின் அதிரடி ஆட்டம்...  ஆரம்பம்: மாற்று கட்சிகள் கலக்கம்

பா.ஜ.,வின் அதிரடி ஆட்டம்...  ஆரம்பம்: மாற்று கட்சிகள் கலக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ.,வில் வி.ஐ.பி.,க்களை சேர்க்கும் பணி வேகமெடுத்துள்ளதால் மாற்று கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ., தென் மாநிலங்களையும் தனது ஆட்சியை கொண்டுவர தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனையொட்டி கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையின் அதிரடி நடவடிக்கையால், புதுச்சேரியில் அப்போது ஆளும் கட்சியில் இருந்தவர்களை பா.ஜ.,வில் சேர்த்து என்.ஆர்.காங்., கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. வரும் சட்டசபை தேர்தலில் இதே கூட்டணியில், அதிக தொகுதிகளில் போட்டியிட பா.ஜ., தலைமை முயற்சித்து வருகிறது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்வர் ரங்கசாமியோ, கூட்டணி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என கூறி வருகிறார். இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. அதேபோன்று, புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற பா.ஜ., தலைமை தனது அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக தற்போது, தேர்தல் ஆணையம் நடத்திவரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு முகவரை நியமித்து கண்காணித்து வருகிறது. அடுத்த கட்டமாக, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தாங்கள் போட்டியிடவுள்ள தொகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தினசரி வலம் வந்து நலத்திட்டங்கள் வழங்கி, வாக்காளர்களை தன்வசப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சி தலைமை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய அறிவுருத்தியுள்ளது. புதுச்சேரியை பொருத்தமட்டில், கட்சி செல்வாக்கைவிட தனிநபர் செல்வாக்கே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது. அதனையொட்டி கடந்த தேர்தலில் பயன்படுத்திய அதே பார்முலாவை பயன்படுத்தி, ஒவ்வொரு தொகுதியிலும், மாற்று கட்சிகளில் உள்ள மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை பா.ஜ.,விற்கு இழக்கும் பணியை துவங்கியுள்ளது. மாற்றுக்கட்சி வி.ஐ.பி.,க்களை பா.ஜ.,விற்கு அழைத்து வருவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு அமைத்துள்ளனர். இக்குழுவின் செயல்பாடுகளை கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், அகில இந்திய பொதுச் செயலாளர் தருண் சவுக், புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் மன்சுக் மாண்டவியா, அர்ஜின்ராம் மெக்வால், கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுரானா ஆகியோர் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதன் முதல்கட்டமாக அ.தி.மு.க.,வை சேர்ந்த முத்தியால்பேட்டை தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்த பாஸ்கர், பா.ஜ.,வில் இணைவது உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுரானாவை சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ., மாநில தலைவர் உடன் இருந்தார். இருப்பினும், அவர் பா.ஜ.,வில் இணைந்தது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை. இவரை தொடர்ந்து காங்., உள்ளிட்ட பிற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை அடுத்தடுத்து பா.ஜ.,வில் இணைப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கிட கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தருண் சவுக் இன்று புதுச்சேரி வருகிறார். அடுத்த ஓரிரு நாட்களில் கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் வரவுள்ளார். அவரது முன்னிலையில், பிற கட்சி வி.ஐ.பி.,க்களை பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தி, அதே வேகத்தில் தேர்தல் பணியை துவங்கிட பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.,வினரின் இந்த அதிரடி நடவடிக்கையால், பிரதான அரசியல் கட்சியின் தலைவர்கள், தங்கள் கட்சி நிர்வாகிகள் அணி மாறுவதை எப்படி தடுப்பது என, புரியாமல் கலக்கமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை