பா.ம.க., தொகுதி செயலாளருக்கு கத்திக்குத்து: மர்ம கும்பலுக்கு வலை
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே பா.ம.க., தொகுதி செயலாளரை கத்தியால் வெட்டிய முகமூடி அணிந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் அச்சுதன், 37; மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ம.க., செயலாளர். இவர், திருபுவனையில் உள்ள வாஷிங்மெஷின், 'ஏசி', பிரிட்ஜ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்து சன்னியாசிக்குப்பம் வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்றார். கண்டமங்கலம், சேஷாங்கனுார் அடுத்த எஸ்.ஆண்டிப்பாளையம் ஐயனார் கோவில் அருகே பின் தொடர்ந்து பைக்கில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அச்சுதனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.உயிருக்கு போராடிய அச்சுதனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிபாலன் ஆகியோரைக் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.