புயல் மழையின்போது மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு புதுச்சேரி: புயல் மழையின்போது மாயமான வாலிபர் 3 நாட்கள் கழித்து வடிகால் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார். பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவர் மாயமாகி இருப்பதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் நேற்று காலை எல்லப்பிள்ளைச்சாவடி, குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனை எதிரில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் பண்னை அருகே செல்லும் வாய்க்காலில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.உருளையன்பேட்டை போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தத தாகூர் நகரைச் சேர்ந்த சீனுவாசன், 27; என்பதும், தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.கடந்த 30ம் தேதி பணிக்கு வந்த சீனுவாசன், புயல் மழை காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்ய கம்பெனியில் இருந்து மதியம் புறப்பட்டார். அதன்பின்பு சீனுவாசன் வீட்டிற்கும் வந்து சேரவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிணமாக வாய்க்கால் மீட்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.