மார்பக புற்றுநோய் பரிசோதனை: கவர்னர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: இந்தியா டெர்ன்ஸ் பிங்க் புதுச்சேரி கிளை சார்பில், மார்பக புற்றுநோய் இலவச மருத்துவ பரிசோதனை சேவா திட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.மார்பக புற்று நோயை தடுக்கவும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் புதுச்சேரி கிளை சார்பில் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை திட்டம் துவக்க விழா கடற்கரை சாலை, மேரி ஹாலில் நேற்று நடந்தது.இந்தியா டெர்ன்ஸ் பிங்க் அமைப்பு நிறுவனர் ஆனந்தகுமார் வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசுகையில், 'மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் உடற்பயிற்சி, யோகா செய்து அதன் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும். புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனை செய்ய தயங்க கூடாது. சமுதாயத்தில் உள்ளவர்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, ரிதம் வாட்டர் மார்வெல் ஹெல்த்கேர் நிறுவன நிர்வாக அதிகாரி ராஜதிலக முத்தன், டில்லி வழக்கறிஞர்கள் கழக தேசிய செயலாளர் லட்சுமிராஜா, கார்டின் ரோபி, காயத்ரி ஸ்ரீகாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.