பி.எஸ்.என்.எல்., கேபிள் திருட்டு
புதுச்சேரி : பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன், பிராட்பேண்ட் காப்பர் கேபிள்களை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். புதுச்சேரி நகரப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 25ம் தேதி காலை புதுச்சேரி நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி லேண்ட்லைன், பிராட்பேண்ட் கேபிள்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆம்பூர் சாலை மற்றும் செஞ்சி சாலை, ரங்கப்பிள்ளை தெரு சந்திப்புகளில் பொருத்தப்பட்டிருந்த 25 ஆயிரம் மதிப்பிலான 42 மீட்டர் நீளமுள்ள, நிலத்தடி காப்பர் லேண்ட்லைன், பிராட்பேண்ட் கேபிள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். துணை கோட்ட பொறியாளர் பால் ஹென்றி, பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.