என்.ஆர்.காங்.,- பா.ஜ., உரசலால் பஸ் ஸ்டாண்ட் திறப்பு தள்ளிப்போகுது
மறைமலையடிகள் சாலையில் இயங்கி வந்த பஸ் நிலையம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.29 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்வதில் இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டா போட்டியால், பஸ் நிலைய திறப்பு விழா தள்ளிப் போனது.ஒரு வழியாக, கடந்த டிசம்பர் மாதம் பஸ் நிலையம் திறக்க முடிவு செய்த நிலையில், கழிவறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தவில்லை எனக்கூறி திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி என பெயர் வைக்க வேண்டும் என பா.ஜ.,வினர் போர்க்கொடி உயர்த்தினர். மற்றொரு தரப்பினர் வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும் என்றனர். இது சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.அதற்கு பதில் அளித்த முதல்வர், கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்படவுள்ள புறநகர் பஸ் நிலையத்திற்கு 'அடல் பிஹாரி வாஜ்பாஸ் பெயர்' சூட்டப்படும் என அறிவித்தார். இதனை பா.ஜ.,வினர் மேஜையை தட்டி வரவேற்றனர்.அதனைத் தெடார்ந்து, புனரமைக்கப்பட்ட மறைமலையடிகள் சாலை பஸ் நிலையம் கடந்த மார்ச் 16ம் தேதி திறக்கப்படலாம் என அரசு வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், அதுவும் தள்ளிப்போய் தற்போது சித்திரை மாதத்தில் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.இதற்கு காரணம், சட்டசபையில் முதல்வர் அறிவித்தபடி மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில், கிழக்கு கடற்கரை சாலையில் புறநநகர் பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகே, ராஜிவ்காந்தி பெயர் கொண்ட பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என பா.ஜ.,வினர் அழுத்தம் கொடுப்பதால் பஸ் நிலையம் திறப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள போட்டா போட்டியால் கட்டி முடித்த பஸ் நிலையம் திறக்கப்படாமல் கிடப்பதால், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் வெயிலடித்தால் புழுதி புயலிலும், மழை பெய்தால் சேறும், சகதியுலும் மக்கள் அவதிப்பட்டு வருவது வேதைனையாக உள்ளது.