அரும்பார்த்தபுரம் - நுாறடி சாலையை இணைக்கும் பைபாஸ் தயார்
புதுச்சேரி: புதுச்சேரி நுாறடிச்சாலை - அரும்பார்த்தபுரம் இடையிலான புதிய பைபாஸ் சாலை பணி முடிந்தது, போக்குவரத்து துவங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சிக்னல் வரை சாலையோரம் ஏராளமான வணிக நிறுவனங்கள் இருப்பதால், சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது என்ற நிலைக்கு அரசு வந்து விட்டது. அதனால், தற்போது உள்ள சாலையோரம் வாய்க்கால் அமைத்து மேம்படுத்தும் பணி நடந்து முடிந்தது.ஆனால் இச்சாலையில், மூலக்குளம் மூலம் இந்திரா சிக்னல் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.அதனால், அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் துவங்கி, ரெட்டியார்பாளையம் ஜான்பால் நகர் வழியாக நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு புதிய புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான நிலம் ஆர்ஜிதத்தில் 15 ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 30 கோடி மதிப்பில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி 2 ஆண்டிற்கு முன் துவங்கியது. 50 அடி அகலத்தில் 4.5 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சென்டர் மீடியனுடன் அமைக்கப்பட்ட இச்சாலையில் 95 சதவீத பணிமுடிந்துள்ளது. மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. முறைப்படி சாலை திறக்கப்படாத நிலையில், கடந்த சில நாட்களாக வாகன போக்குவரத்து துவங்கி விட்டது. விசாலமான சாலையால் வாகனங்கள் விரைவாக செல்கின்றன.மின் விளக்கு பொருத்துதல், அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் எஞ்சிய சாலை பணிகளை விரைந்து முடித்து சாலையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவுண்டானா அமைக்கப்படுமா?
புதிய பைபாஸ் சாலையில் ரிப்ளக்டர்கள் இல்லாததால் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மீடியன் மற்றும் சாலையோரம் ரிப்ளக்டர் பொருத்த வேண்டும்.இந்திரா சிக்னலில் இருந்து பைபாஸ் செல்லும் வாகனங்கள், போக்குவரத்து துறை அலுவலகம் வரை சென்று, 'யு டர்ன்' செய்து மீண்டும் மேம்பாலத்தில் ஏறி, ஜான்பால் நகர் அருகே இடது பக்கமாக பிரிந்து செல்லும் பாலம் வழியாக பைபாஸ் செல்லும் நிலை உள்ளது. இந்திரா சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலத்தின் மைய பகுதியில் மேற்கு நோக்கி திரும்பி பைபாஸ் சாலையில் செல்வதற்கான வழியை மூடி வைத்துள்ளனர். அதனை திறக்கவும், அப்பகுதியில் ரவுண்டானா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.