வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்
அரியாங்குப்பம்: கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சியில், 40 ஆண்டுகளாக இருந்து வந்த வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கடலுார் மாவட்டம், கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சி புதுக்குப்பம் கிராமம், பாடசாலை வீதியில், மழைநீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால், மழை நீர் வடியாமல், கிராம மக்கள் அவதிப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பல ஆண்டுகளாக அப்பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றி, ஜே.சி.,பி., மூலம் வடிகால் நீர் செல்வதற்கு வாய்க்காலை ஏற்படுத்தி கொடுத்தனர். கிராமத்தின் 40 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.