கார் வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடி
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் கார்களை வாடகைக்கு எடுத்து, அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கருவடிக்குப்பம், பாரதி நகரை சேர்ந்தவர் அரிவேந்தன், 28; டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் சென்னை, காட்டுக்குப்பத்தை சேர்ந்த மணி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, புதுச்சேரியில் நடக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 கார்களை வாடகைக்கு பேசியுள்ளார்.அதன் பேரில், முன் பணமாக 3 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பின், மணி அறிவுறுத்தலின் பேரில், வில்லியனுாரை சேர்ந்த எழிலன் என்பவர் 2 சொகுசு கார்களை அரிவேந்தனிடம் இருந்து, சென்னைக்கு எடுத்து சென்றார்.ஆனால், கார்களுக்கான வாடகையை அவர்கள் முழுமையாக அரிவேந்தனுக்கு தரவில்லை. கார்களை திரும்ப ஒப்படைக்கவில்லை. இந்நிலையில், கார்கள் இருக்கும் இடம் குறித்து விசாரித்தபோது, சென்னை முகப்பேரில் உள்ள ஒருவரிடம், கார்களை அவர்கள் அடமானம் வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.அரிவேந்தன் புகாரின் பேரில் மணி, எழிலன் ஆகியோர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.