போலி பத்திரம் தயாரித்து இடம் விற்பனை: 3 பேர் மீது வழக்கு
புதுச்சேரி : முன்னாள் பதிவாளர் மனைவியின் இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, 100 அடி சாலை வாசன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்; ஓய்வு பெற்ற பதிவாளர். இவருக்கு, சகுந்தலா என்ற மனைவியும், ராஜராஜன் என்ற மகனும் உள்ளனர்.சகுந்தலாவிற்கு சொந்தமாக உழவர்கரையில் உள்ள இடத்தில் வீடு கட்டுவதற்கு, நன்கு அறிமுகமான நைனார்மண்டபத்தை சேர்ந்த சேகர் என்பரிடம் ஒப்பந்தம் போட்டு, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சேகர் சகுந்தலா தனக்கு பவர் கொடுத்தது போல், போலியாக பத்திரம் தயார் செய்துள்ளார்.அதனை கொண்டு, புதுச்சேரி விவேகானந்தா நகரை சேர்ந்த ஞானவேலு, சாரம், குயவர்பாளையத்தை சேர்ந்த சிந்துஜா ஆகியோருக்கு இடத்தை சேகர் விற்பனை செய்துள்ளார்.இதுகுறித்து சகுந்தலாவின் மகன் ராஜராஜன், அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் போலி பத்திரம் தயார் செய்த சேகர், இடத்தை வாங்கிய ஞானவேல், சிந்துஜா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.