பெண்ணுக்கு மிரட்டல் ஒருவர் மீது வழக்கு
புதுச்சேரி : ஆக்கிரமிப்பை அகற்ற கூறிய பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி, சாரம், வெங்கடேஸ்வரா நகர், அவ்வை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி சவுமியா, 29. இவரது இடத்தின் பக்கத்தில், அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவர் மதில் சுவர் கட்டியுள்ளார். ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் கட்டியுள்ளதாக, சவுமியா, உழவர்கரை தாசில்தார் அலுவலகம் மற்றும் போலீசில் புகார் செய்தார்.இந்நிலையில், சவுமியா தனது இடத்தில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள மதில் சுவரை அகற்ற வேண்டும் என, சதாசிவத்திடம் கேட்டார். அவர்களுக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, அவர், சவுமியா மற்றும் அவரது தாய்க்கு சதாசிவம் மிரட்டல் விடுத்தார். சவுமியா புகாரின் பேரில், சதாசிவம் மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.