போலி இன்சூரன்ஸ் பாலிசி சமர்ப்பித்த தனியார் நிறுவனம் மீது வழக்கு
புதுச்சேரி: போலி இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ரூ. 20 லட்சம் விபத்து காப்பீடு பெற முயன்றதாக பெங்களூரு தனியார் நிறுவனம் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பெங்களூரு தனியார் நிறுவனத்தின் (விஜய் ஆட்டோ சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்) மஹிந்திரா பலேரோ கார் (கேஏ 05 எம்.எல் 4455) மோதிய விபத்தில் ஸ்கூட்டியில் (பி.ஒய் 01 சி.எல் 9387) சென்ற வில்லியனுார், சிவகணபதி நகரை சேர்ந்த சத்யா, 26; படுகாயமடைந்தனர். இந்த விபத்து வழக்கில் ரூ. 20 லட்சம் இழப்பீடு கோரி சத்யா குடும்பத்தினர் கடலுார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கோர்ட்டில் தனியார் நிறுவனம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசியை இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பாலிசி போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பிராந்திய மேலாளர் நந்தினி நேற்று முன்தினம் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மீது சந்தேகத்தின் பேரில், மோசடி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.