வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
பாகூர் : பாகூர் அடுத்த இருளன்சந்தை புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜ், 30; மீன் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 29ம் தேதி இரவு மீன் குட்டையை பராமரித்து விட்டு, வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். அங்குள்ள வாட்டர் டேங்க் அருகே நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த சூசைநாதன், பாரதிராஜிடம் இந்நேரத்தில் உனக்கு இங்கு என்ன வேலை என, கேட்டார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சூசைநாதனின் நண்பர்கள், பாரதிராஜாவை தாக்கினர். இதனிடையே கடந்த 1ம் தேதி பாரதிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அங்குள்ள மைதானத்தில் விளையாடினர். அப்போது, திருப்பணாம்பாக்கம் பூபதி, இருளஞ்சந்தை வீரபாண்டி, சூசைநாதன் ஆகியோர் பைக்கில், மைதானத்திற்குள் புகுந்து ரேஸ் விட்டனர். இதனை தட்டிக்கேட்ட பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்கள் கோகுல், தருண் உள்ளிட்டோரை பூபதி, சூசைநாதன், வீரபாண்டி ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மூவரும் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாரதிராஜ் புகாரின் பேரில் சூசைநாதன், பூபதி, வீரபாண்டி ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.