ஊழியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு சிதம்பரம் பல்கலையில் பரபரப்பு
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் ஒரிஜினல் சான்றிதழ்களை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றது. பின்னர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் பல்வேறு அரசு துறைகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர்.தற்போது பல்கலைகழகத்தில் ஆசிரியரல்லாத ஊழியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என, கடந்த வாரம் அரசிடமிருந்து, பல்கலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் ஆசிரியரல்லாத அனைத்து ஊழியர்களும் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை, இரண்டு செட் நகல்களுடன் பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்துள்ளனர்.ஏற்கனவே, பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று, நிர்வாக அதிகாரியாக இருந்த சிவ்தாஸ் மீனா இருந்தபோது, ஆசிரியரல்லாத ஊழியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. தற்போது மீண்டும் சரிபார்க்க நடவடிக்கை எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.