மாற்றுத்திறனாளி வீரருக்கு முதல்வர் நிதி வழங்கல்
புதுச்சேரி : நைஜீரியாவில் நடைபெற உள்ள சர்வதேச பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும், மாற்றுத்திறனாளி வீரருக்கு, பயண செலவிற்காக ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நெல்லித்தோப்பு, கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ட சுப்ரமணியன், 21; மாற்றுத்திறனாளியான இவர், தேசிய அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இவர், நைஜீரியா நாட்டில் வரும் 30ம் தேதி துவங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவரை ஊக்குவிக்கும் வகையில், அவரது பயண செலவிற்காக, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய் வழங்கிட முடிவு செய்யப் பட்டது. அதன்படி, சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, வெங்கட்ட சுப்ரமணியனிடம் வழங்கி, வாழ்த்தினார்.