விரைவில் தீபாவளி இலவச தொகுப்பு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.570 ரூபாய் மதிப்புள்ள இலவச மளிகை தொகுப்பு விரைவில் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நெட்டப்பாக்கத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கடந்த ஆட்சியில் மாநில வளர்ச்சி பின்னோக்கி சென்றது. உள்கட்டமைப்பை மேம்படுத்த எந்த பணியும் நடக்கவில்லை. கல்வி நிதி உதவி, வீடு கட்டும் திட்டம் என, எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இந்த அரசு சொன்னதையும் ,சொல்லாதையும் செய்து வருகிறது. வரும் 10ம் தேதிக்கு மேல் இலவச அரிசி, கோதுமை வழங்கப்படும், விடுபட்டு இரு மாதங்களுக்கும் சேர்ந்து இலவச அரிசி வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கார்டிற்கு ரூ.570 மதி்பபுள்ள எண்ணெய், ரவை, சர்க்கரை மற்றும் மளிகை உள்ளிட்ட இலவச தொகுப்பு விரைவில் வழங்கப்படும். அடுத்த மாதம் இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். 37 மாணவர்கள் அரசு மருத்துக் கல்லுாரியில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர். உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பை அரசு முழுமையாக ஏற்படுத்தி கொடுத்துள்ளது. டிசம்பரம் மாதம் முதல் மேலும், 5 ஆயிரம் முதியோர்களுக்கு புதிதாக உதவித் தொகை வழங்கப்படும். மஞ்சள் ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை விரைவில் வழங்கப்படும்' என்றார்.