புதுச்சேரியில் புத்தக கண்காட்சி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில், 60 ஆயிரம் தலைப்புகளில் பல்வேறு மொழி புத்தகங்கள் இடம் பெற்றுள்ள தேசிய புத்தக கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரியில், 28 வது தேசிய புத்தக கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. இந்த கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, 2024ம் ஆண்டின், 24 புதிய புத்தகங்களை வெளியிட்டார்.இதில் சபாநாயகர் செல்வம், ரமேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின், 52 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், 60 ஆயிரம் தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில், 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.கண்காட்சி வரும், 22ம் தேதி வரை ,காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. நாள்தோறும் பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகள், மாலை 6:00 மணிக்கு நடக்கின்றன.பல ஆண்டுகளாக பங்கேற்கும் புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா விருதுகளும் தொடர்ந்து, ஆதரவினை அளித்து கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தவர்களுக்கு, புத்தக சேவா விருதுகளும் வழங்கப்பட உள்ளன.புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குபவர்களுக்கு, புத்தக நட்சத்திரம் சான்றிதழ்களும், ரூ10 ஆயிரத்திற்கு அதிகமாக புத்தகம் வாங்குபவர்களுக்கு, புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.