இளம் விஞ்ஞானிகளுக்கு அரசு உதவுகிறது முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி : 'இளம் விஞ்ஞானிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்வதாக' முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.தென்னிந்திய அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற அவர், பேசியதாவது:அறிவியல் கண்காட்சி, புதுச்சேரியில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும். அறிவியல் சம்மந்தப்பட்ட செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் தொடர்பான நிலையில் உயர்ந்து இருக்கும் நாட்டை தான் வளர்ந்த நாடுகள் என, சொல்கிறோம். ஆகையால், மாணவர்கள் அறிவியல் சார்ந்த புதிய படைப்புகளில் நாட்டம் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசானது தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகிறது.கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற பல துறைகளில் அறிவியல் சார்ந்த வளர்ச்சி மிக முக்கிய ஒன்றாக இருப்பதை பார்க்கிறோம்.இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான ஆராய்ச்சி கூடங்கள் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. சுற்றுச் சூழல் துறை மூலம் புதிய படைப்புகளை கண்டுபிடிக்கும் மாணவர்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.புதுச்சேரியில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட வேண்டும்; உருவாக வேண்டும். புதிய படைப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். 6 மாநில மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளதால், மாணவர்களுக்குள் கருத்து ஒற்றுமை, நட்பு, அறிவியல் சார்ந்த செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்' என்றார்.